சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.086   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முறி உறு நிறம் மல்கு
பண் - சாதாரி   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=bRjVXotc8Bc
4.073   திருநாவுக்கரசர்   தேவாரம்   பெருந் திரு இமவான் பெற்ற
பண் - திருநேரிசை   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=OvEOqME0sZc
5.077   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூரியா வரும், புண்ணியம்; பொய்
பண் - திருக்குறுந்தொகை   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=lrthL1RMyoY

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.086   முறி உறு நிறம் மல்கு  
பண் - சாதாரி   (திருத்தலம் திருச்சேறை (உடையார்கோவில்) ; (திருத்தலம் அருள்தரு ஞானவல்லியம்மை உடனுறை அருள்மிகு சென்னெறியப்பர் திருவடிகள் போற்றி )
முறி உறு நிறம் மல்கு முகிழ்முலை மலைமகள் வெருவ, முன்,
வெறி உறு மதகரி அதள் பட உரிசெய்த விறலினர்;
நறி உறும் இதழியின் மலரொடு, நதி, மதி, நகுதலை,
செறி உறு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.

[1]
புனம் உடை நறுமலர் பலகொடு தொழுவது ஒர் புரிவினர்
மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர்,
இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர்
சினம் முதிர் விடை உடை அடிகள் தம் வள நகர் சேறையே.

[2]
புரிதரு சடையினர்; புலி அதள் அரையினர்; பொடி புல்கும்
எரி தரும் உருவினர்; இடபம் அது ஏறுவர்; ஈடு உலா
வரி தரு வளையினர் அவர் அவர் மகிழ்தர, மனைதொறும்
திரிதரு சரிதையர்; உறைதரு வள நகர் சேறையே.

[3]
துடி படும் இடை உடை மடவரல் உடன் ஒரு பாகமா,
இடிபடு குரல் உடை விடையினர்; படம் உடை அரவினர்;
பொடி படும் உருவினர்; புலி உரி பொலிதரும் அரையினர்
செடி படு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.

[4]
அந்தரம் உழிதரு திரிபுரம், ஒரு நொடி அளவினில்
மந்தர வரிசிலை அதன் இடை அரவு அரிவாளியால்,
வெந்து அழிதர எய்த விடலையர்; விடம் அணி மிடறினர்
செந்தழல் நிறம் உடை அடிகள் தம் வள நகர் சேறையே.

[5]
மத்தரம் உறு திறல் மறவர் தம் வடிவுகொடு, உருவு உடைப்
பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால்,
அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி
சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.

[6]
பாடினர், அருமறை முறைமுறை; பொருள் என அரு நடம்-
ஆடினர்; உலகு இடை அலர்கொடும் அடியவர் துதிசெய,
வாடின படுதலை இடு பலி அதுகொடு மகிழ்தரும்
சேடர் தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.

[7]
கட்டு உரம் அதுகொடு கயிலை நல் மலை நலி கரம் உடை
நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிசெய்தார்
மட்டு உரம் மலர் அடி அடியவர் தொழுது எழ அருள் செயும்
சிட்டர் தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.

[8]
பன்றியர், பறவையர், பரிசு உடை வடிவொடு படர்தர,
அன்றிய அவர் அவர், அடியொடு முடி அவை அறிகிலார்
நின்று இரு புடை பட, நெடு எரி நடுவே ஒர் நிகழ் தரச்
சென்று, உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே.

[9]
துகள் துறு விரி துகில் உடையவர், அமண் எனும் வடிவினர்
விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல; வினவிடல்!
முகிழ்தரும் இளமதி அரவொடும் அழகு உற, முது நதி
திகழ்தரு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.

[10]
கற்ற நல்மறை பயில் அடியவர் அடி தொழு கவின் உறு
சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறைமேல்,
குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன
சொல்,-தகவு உற மொழிபவர் அழிவு இலர்; துயர் தீருமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.073   பெருந் திரு இமவான் பெற்ற  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருச்சேறை (உடையார்கோவில்) ; (திருத்தலம் அருள்தரு ஞானவல்லியம்மை உடனுறை அருள்மிகு சென்னெறியப்பர் திருவடிகள் போற்றி )
பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை
வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும்
அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத்
திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

[1]
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய் என்று எண்ணி, மயக்கில் வீழ்ந்து, அழுந்துவேனைப்
பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம்
தீர்த்து அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

[2]
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம்
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு
வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெங் கானகத்துச்
சென்று அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

[3]
அஞ்சையும் அடக்கி, ஆற்றல் உடையனாய், அநேக காலம்
வஞ்சம் இல் தவத்துள் நின்று, மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை
செஞ்சடை ஏற்றார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

[4]
நிறைந்த மா மணலைக் கூப்பி, நேசமோடு ஆவின் பாலைக்
கறந்து கொண்டு ஆட்ட, கண்டு கறுத்த தன் தாதை தாளை
எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்னச்
சிறந்த பேறு அளித்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

[5]
விரித்த பல்கதிர் கொள் சூலம், வெடிபடு தமருகம், கை
தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகி, வேழம்
உரித்து, உமை அஞ்சக் கண்டு, ஒண் திரு மணிவாய் விள்ளச்
சிரித்து, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

[6]
சுற்றும் முன் இமையோர் நின்று, தொழுது, தூ மலர்கள் தூவி,
மற்று எமை உயக்கொள்! என்ன, மன்னு வான் புரங்கள் மூன்றும்
உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல்வாயின் வீழச்
செற்று, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

[7]
முந்தி இவ் உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும்,
எம் தனி நாதனே! என்று இறைஞ்சி நின்று ஏத்தல் செய்ய,
அந்தம் இல் சோதி தன்னை அடி முடி அறியா வண்ணம்
செந்தழல் ஆனார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

[8]
ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி,
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று,
மருவி, எம்பெருமான்! என்ன, மலர் அடி மெள்ள வாங்கித்
திரு அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

[9]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.077   பூரியா வரும், புண்ணியம்; பொய்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருச்சேறை (உடையார்கோவில்) ; (திருத்தலம் அருள்தரு ஞானவல்லியம்மை உடனுறை அருள்மிகு சென்னெறியப்பர் திருவடிகள் போற்றி )
பூரியா வரும், புண்ணியம்; பொய் கெடும்;
கூரிது ஆய அறிவு கைகூடிடும்-
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி
நாரிபாகன்தன் நாமம் நவிலவே.

[1]
என்ன மா தவம் செய்தனை!- நெஞ்சமே!-
மின்னுவார் சடை வேத விழுப்பொருள்,
செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி
மன்னு சோதி, நம்பால் வந்து வைகவே.

[2]
பிறப்பு, மூப்பு, பெரும் பசி, வான் பிணி,
இறப்பு, நீங்கிடும்; இன்பம் வந்து எய்திடும்-
சிறப்பர் சேறையுள் செந்நெறியான் கழல்
மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே.

[3]
மாடு தேடி, மயக்கினில் வீழ்ந்து, நீர்,
ஓடி எய்த்தும், பயன் இலை; ஊமர்காள்!
சேடர் வாழ் சேறைச் செந்நெறி மேவிய
ஆடலான் தன் அடி அடைந்து உய்ம்மினே!

[4]
எண்ணி நாளும், எரி அயில் கூற்றுவன்
துண்ணென்று ஒன்றில்- துரக்கும் வழி கண்டேன்;
திண் நன் சேறைத் திருச் செந்நெறி உறை
அண்ணலார் உளர்: அஞ்சுவது என்னுக்கே?

[5]
தப்பி வானம், தரணி கம்பிக்கில் என்?
ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என்?
செப்பம் ஆம் சேறைச் செந்நெறி மேவிய
அப்பனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே?

[6]
வைத்த மாடும், மடந்தை நல்லார்களும்,
ஒத்து ஒவ்வாத உற்றார்களும், என் செய்வார்?
சித்தர் சேறைத் திருச் செந்நெறி உறை
அத்தர்தாம் உளர்; அஞ்சுவது என்னுக்கே?

[7]
குலன்கள் என் செய்வ? குற்றங்கள் என் செய்வ?
துலங்கி நீ நின்று சோர்ந்திடல், நெஞ்சமே!
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய
அலங்கனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே?

[8]
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும்
விழவிடாவிடில், வேண்டிய எய்த ஒணா;
திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய
அழகனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே!

[9]
பொருந்து நீள் மலையைப் பிடித்து ஏந்தினான்
வருந்த ஊன்றி, மலர் அடி வாங்கினான்
திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு
இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே.

[10]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list